மகாத்மா காந்தி, தமிழகத்திற்கு ஆற்றிய பங்கு – சிறப்பு பார்வை

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது உப்பு சத்தியாகிரகம். காந்தியடிகளின் இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த உலகையே இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த மாபெரும் போராட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்று, வேதாரண்யமும் பங்கு பெற்றது. வடக்கே தண்டியில் காந்தியடிகள் உப்புக் காய்ச்சும் போராட்டத்தை முன்னெடுத்தபோது, தெற்கே வேதாரண்யத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் அவர்கள் சத்தியாகிரகத்தை நடத்துமாறு தனது அரசியல் குரு ராஜாஜி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி 1930 ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வடக்கு முதல் தெற்கு வரை உள்ள இந்தியர்கள் ஒன்று சேர்ந்ததை இந்தப் போராட்டம் உலகிற்குக் காட்டியது வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும்.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் பற்றி கூறும் சர்தார் வேதரத்தினம் அவர்களின் பேரன் வேதரத்தினம், தண்டியில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் இல்லை என்றார். ஆனால் வேதாரண்யத்தில் பெண்களும் கலந்து கொண்டது மிகவும் முக்கியமான வேறுபாடு என்று குறிப்பிடுகிறார்.

தனது 6 வயதிலே உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட தியாகி ராமாமிருதம் அந்த நிகழ்வை இன்றும் பசுமையோடு நினைவில் வைத்துள்ளார். அவரது அறப் போராட்ட அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கும் வழிகாட்டுதலாக அமைகிறது.

வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபமும், நினைவுத்தூணும் ஆங்கிலேயர்களை அதிர வைத்தது. உலகையே வியக்க வைத்த உப்பு சத்தியாகிரகத்தில், காந்தியடிகளின் வார்த்தைகளை வேதவாக்காக கொண்டு வேதாரண்யம் களம் இறங்கிய அந்த நாளை இன்றும் பலர் நினைவு கூறுகின்றனர். காந்தியத்தின் சிறப்பையும், சுதந்திரத்தின் பின் உள்ள உழைப்பையும் தமிழர்களுக்கு எப்போதும் நினைவுபடுத்துகின்றது வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகம்.

Exit mobile version