ஊரடங்கு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு!

பவானி ஆற்றின் குறுக்கே 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மின்கட்டணத்தில் குளறுபடி இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டம் நடத்துவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 21 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான 13 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், 76 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளி கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைகளின் சார்பில் நடைபெறும் 14 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், 4 ஆயிரத்து 642 பயனாளிகளுக்கு 53 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்பவானி பாசனக் கால்வாயில் தண்ணீர் கசிவைக் குறைத்து கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 935 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

 

பவானி ஆற்றின் குறுக்கே 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

மின்கட்டணத்தில் குளறுபடி இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டம் நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊரடங்கு காலத்தில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதலமைச்சர் குறிப்பிட்டார். ஊரடங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஊரங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

Exit mobile version