இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் தமிழக தொல்லியல் துறை!!

பண்டைய தமிழகத்தின் தொன்மையை வெளிக்கொணரும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக தொல்லியல் துறை.

இதில் கீழடியில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடு, மிகவும் நேர்த்தியான விலை மதிப்பற்ற சூதுபவளம், மணிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் சுடுமண்ணாலான முத்திரை, மாட்டினத்தைச் சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதியும் கண்டு பிடிக்கப்பட்டன. கொந்தகையில் பளபளப்பான செவ்வண்ண நிறந்தில் முதுமக்கள் தாழிகள், அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகரத்தில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மெல் அலகு கத்திகளும், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயமும் கண்டுபிடிக்கப்பட்டன. மணலூரில் கட்டுமான அடையாளங்கள், ஆதிச்சநல்லூரில் நுண்கற்காலக் கருவிகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகளையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட விளிம்புடன் கூடிய கிண்ணம், கல்லால் ஆன பந்து ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. கொடுமணலில் வாய்க்கால் போன்ற கட்டடப்பகுதி, இரும்பு உலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சங்க கால தமிழரின் வாழ்வியல் சான்றுகள் தோண்டத் தோண்ட கிடைத்து வரும் நிலையில், அதனை நவீன தொழில்நுட்ப முறையில் ஆவணப்படுத்தும் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது. விரிவான அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, பொதுமக்கள் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வு சார்ந்த புத்தகங்களையும், அகழாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களை, கண்காட்சி மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இது மட்டுமின்றி தமிழினத்தின் தொன்மையைப் பாதுகாக்க, கீழடியில் அருங்காட்சியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version