ஐ.நா. அமைப்பின் உதவியுடன் நிதி ஆயோக் தயாரித்துள்ள வளர்ச்சி பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2016ம் ஆண்டு சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு என்ற குறியீட்டு திட்டத்தை ஐ.நா. அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து இந்தாண்டு முதன்முறையாக இந்திய மாநிலங்களின் வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது.
இதில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் கேரளா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஏழ்மையை குறைப்பதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இதில் தெரியவந்துள்ளது.
நல்ல சுகாதாரம் வழங்குவது, பசியை போக்குவது, பாலின சமநிலை, தரமான கல்வி வழங்குவதில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மக்களுக்கு சுத்தமான தண்ணீர், சுகாதார வசதி கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.