தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் பல இடங்களில் காலை லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Exit mobile version