இந்தியத் திருநாட்டின் தேசிய கீதமான ஜனகனமண பாடலை எல்லோருக்கும் தெரியும். ஆம். நிச்சயம் எல்லோருக்கும் தெரியும் பள்ளிப்படிப்பின் 12 ஆண்டுகள் திரும்ப திரும்ப பாடி பயிற்சி பெற்றிருப்போம். ஆனால் இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? என்றைக்காவது தேடியிருப்போமா ? இதோ ஜனகனமன பாடலின் தமிழ் வடிவம்…
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், குஜராத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;
இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன;
நின் புகழைப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே.
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
இதுபோல இன்னும்4 பத்திகள் சேர்த்து 5 பத்திகள் எழுதப்பட்டன. ஆனால் முதல் பத்தி மட்டுமே இன்று நம்மால் பாடப்படுகிறது.
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். பின் 1950 ம் ஆண்டு இந்த பாடல்தான் இனி தேசிய கீதம் என்று அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அறிவித்தார்.