உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் : பிரதமர் மோடி

ஐ.நா.வில், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் 2-வது முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். 75-வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும் 2022-ஆம் ஆண்டிற்குள், ஏழை மக்களுக்கு 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் வரிகளை குறிப்பிட்டு, இந்தியாவின் பண்பாடு, கலாசாரத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார்.

தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் பிரச்னை அல்ல, சர்வதேச அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் என்று பிரதமர் குறிப்பிட்டார். மனித நேயத்துக்காக உலக நாடுகள் ஒன்று பட வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்றார். பருவ நிலை மாற்றம் குறித்து சரியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய மோடி, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக இந்தியா கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version