தமிழகம், கேரள மாநில நதிநீர்ப் பங்கீட்டுக் குழுக்களின் முதற்கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் நாளை தொடங்குகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இடையே நதிநீர்ப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த பேச்சு கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது பரம்பிக்குளம் – அழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு குறித்தும், பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்தும் இரு மாநில அரசுகளின் செயலாளர்கள் நிலையில் குழு அமைக்கப்பட்டு பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவைத் தொடர்ந்து இருமாநிலங்களின் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதில், ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தினை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.