எம்.எஸ்.தோனி என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் 1981-ஆம் ஆண்டு ஜுலை 7-ஆம் தேதி பிறந்தார். ராஞ்சியில் உள்ள ஷியாமளி டி.ஏ.வி. ஜவஹர் வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த தோனி, ஆரம்பத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார். அப்போது, உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடும்படி அவரது கால்பந்து பயிற்சியாளரால் அனுப்பிவைக்கப்பட்டார். தோனி கிரிக்கெட் விளையாடியது இல்லை என்றாலும், தோனி தனது விக்கெட்-கீப்பிங் திறமையால் பாராட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் 1997ஆம் ஆண்டு பதினாறு வயதிக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும்போது, அவருடைய அசத்தலான திறமை வெளிப்பட்டது.
2004ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான தோனி, தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார். ஜெய்ப்பூரில் கடந்த 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில், அதிரடியாக விளையாடி 183 ரன்கள் குவித்ததன் மூலம் தோனி பிரபலமடைந்தார்.
இவரின் தலைமையில் 2007 ஐசிசி இருபது ஓவருக்கான போட்டியிலும், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 உலக கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றது. மறுபுறம் டெஸ்ட் அரங்கில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. மைதானத்தில் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் எளிமையாக கையாளும் தோனியை, ரசிகர்கள் கேப்டன் கூல் என அழைத்தனர். இதேபோன்று, கடைசி ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, பல முறை இந்திய அணியை வெற்றிபெறவைத்துள்ளார். இதனால், இவர் சூப்பர் ஃபினிஷர் என போற்றப்பட்டார்.
சென்னை அணிக்காக விளையாடிய தோனியை தமிழக ரசிகர்கள் “தல தோனி” என அன்புடன் அழைக்கின்றனர். 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார் தோனி, இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நவம்பர் 2011-ல் இந்திய ராணுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவியை அளித்து கவுரவித்தது. கபில்தேவுக்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் தோனி மட்டுமே.
இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009-ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான 4-வது மிக உயரிய விருதான “பத்மஸ்ரீ” விருது, 2018-ஆம் ஆண்டில் இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூசன்” உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றுள்ளார்.
2005 முதல் 2014 வரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ். தோனி, 4,876 ரன்களும், 256 கேட்ச்களும் பிடித்துள்ளார். இதில் 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எடுத்த 224 ரன்களே அதிகமானவை. ஒருநாள் போட்டிகளில் 2004 முதல் 2019 வரை 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி10,773 ரன்களும், 321 கேட்ச்களையும் பிடித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமானவை. 2006 முதல் 2019 வரை 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, மொத்தம் 1,617 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்டசமாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை டி-20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் எடுத்துள்ளார். 2008 முதல் 2019 ஆண்டு வரை 190 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 4,432 ரன்கள் குவித்துள்ளார். 2018-ல் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார்.