அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தொடர்ந்து மிரட்டும் அராஜக போக்கை திமுக உடனே நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் காதுகளில் பூ சுற்றி ஆட்சிக்கு வந்தது முதல் திமுகவினரின் அட்டகாசம் எல்லை மீறிப்போயுள்ளதாக கூறியுள்ளார்.
ரேஷன் கடைகளில் தலையீடு; சட்ட விரோதமாக மணல் அள்ளும்போது தடுப்பவர்களை தாக்குவது, செய்யாத ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு பில் பாஸ் செய்யுமாறு உள்ளாட்சித் துறை அதிகாரிகளை மிரட்டுவது; நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு என திமுகவினரின் அராஜக பட்டியல் நீள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் என்ற இடத்தில் சாலை போடும் பணிக்கு கமிஷன் கேட்டு அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளரை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ மிருகத்தனமாகத் தாக்கி விரட்டியதாக வெளியான செய்தியையும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் திமுக எம்எல்ஏவின் அடாவடி, அராஜகம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.