தலை ஆடியை முன்னிட்டு பவானி கூடுதுறையில் புதுமணத்தம்பதிகள் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகியை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானியில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. காவிரி, அமுதா, பவானி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமாக பவானி கூடுதுறை விளங்குகிறது. இங்கு தலை ஆடியையொட்டி, புதுமணத் தம்பதிகள் தலையில் காசு வைத்து, புனித நீராடி தங்களது புது மாலைகளை ஆற்றில் விட்டு, சங்கமேஸ்வரர், வேதநாயகியை வழிபட்டு செல்வர்.
இதையொட்டி, பவானி, அந்தியூர், கோபி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கர்நாடகா மாநில பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பவானி கூடுதுறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.