ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் பயணித்த விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரையில் மொழிப் பிரச்னையால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் பயணித்த விவகாரத்தில் 3பேரை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை, செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கள்ளிக்குடி நோக்கி சென்றுள்ளது. ரயில் திருமங்கலம் ரயில்நிலையம் அருகே உள்ள கேட்டைக் கடந்ததும் கேட் கீப்பர் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் இந்தப் பாதை வழியாக கள்ளிக்குடியிலிருந்து புறப்பட்ட ரயில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக எதிர்முனையில் இருந்த ரயில்வே ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்ட இரண்டு ரயில்களையும் பாதி வழியிலேயே நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை செங்கோட்டை ரயில் மீண்டும் திருமங்கலத்திற்கு இயக்கப்பட்டு நிலைமை சரி செய்யப்பட்டது.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளிக்குடியில் இருந்த நிலைய அதிகாரி தீப்சிங் மீனா இந்தியில் தகவலை கூறியது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது தகவலை தண்டவாளத்தில் இருந்த ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முருகானந்தம், கள்ளிக்குடி ஸ்டேசன் மாஸ்டர் தீப்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேசன் மாஸ்டர் ஜெயக்குமார் ஆகிய மூவரையும் தெற்கு ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது.

Exit mobile version