காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு

காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறை பற்றிய மக்களின் எண்ணங்கள் குறித்தும், அவர்கள் விசாரணை செய்யும் விதம், நேரம் தவறாமை, மக்களுக்கு பதிலளிக்கும் விதம் மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பானது, நாடுமுழுவதும் 173 மாவட்டங்களில், 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பத்தினரிடம், வரும் மார்ச் மாதம் முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. 9 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து, காவல்துறையில் உள்ள வழக்கமான முறைகள் மாற்றியமைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வை, டெல்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையக்குழு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version