கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும் 25 நாள்கள் கவனிக்கும் சுகாதாரத்துறை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தபின்னும், உடல்நலக் குறைவு ஏற்படுவோரைக் கண்காணிக்க, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இத்திட்டம் குறித்த செய்தித்தொகுப்பைக் காணலாம்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தபின்னரும் சிலருக்கு எடை குறைவது, மூச்சுவிடுவதில் கோளாறு உள்பட பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன. இத்தகையவர்களைக் கண்டறிந்து முற்றிலுமாக குணமாக்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான், கொரோனா தொடர் கண்காணிப்புத் திட்டம்…

இதன்படி, சிகிச்சை முடிந்து சென்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக 25 நாள்களுக்கு நோயாளிகளைக் கண்காணித்து, மீண்டும் அவர்களுக்கு உடல்நிலையில் குறைவு ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து தேவையான சிகிச்சை அளிக்கப்படும். முதலில் சென்னை அரசினர் இராஜீவ்காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்ட கொரோனா தொடர் கண்காணிப்பு மையம், தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுக்க, நேரில் ஆலோசனை அளிக்கமுடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான மூச்சுப்பயிற்சி போன்றவற்றை வீடியோ மூலமாக அவர்களது தொலைபேசிக்கு அனுப்பி சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதேபோன்று குணமடைந்தவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க பல திட்டங்களையும் செயல்படுத்தி வருவது மக்களிடம் பேராதரவைப் பெற்றுள்ளது.

 

Exit mobile version