கமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் “சூர்யா” – பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இந்த 22 வருடத்தில் தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. சரவணன் என்ற இயற்பெயருடைய சூர்யாவுக்கு நடிக்க வந்த புதிதில் அவருக்கான அப்போதைய அடையாளம் நடிகர் சிவகுமாரின் மகன் என்பது தான்.

1997ல் “நேருக்கு நேர்” படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து அறிமுகமான நடித்த சூர்யாவுக்கு , கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்த “ப்ரண்ட்ஸ்” படமே தமிழ் சினிமாவில் அவருக்கான இடத்தை பெற்று தந்தது. அதே ஆண்டு வெளியான “நந்தா” படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை என்றே சொல்லலாம். “உன்னை நினைத்து” படம் அவருக்கான பேமிலி ஆடியன்ஸை கொடுத்தது.

எல்லோரும் ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க சூர்யாவோ வெரைட்டியாக பல படங்களில் நடித்தார். “அன்புசெல்வன்” ஐபிஎஸ் ஆக “காக்க..காக்க”வில் மிரட்டினார். “பேரழகன்” படத்தில் கூன் விழுந்த கேரக்டரில் நடித்து வியக்க வைத்தார். இந்த படத்தில் தான் முதல்முறையாக 2 வேடங்களில் தோன்றினார்.

 

“கஜினி”யில் சஞ்சய் ராமசாமி கேரக்டரில் தொழிலதிபராகவும், மொட்டையடித்த கதாபாத்திரத்திலும் அசத்தியிருப்பார். அதன்பிறகு ஆறு, வேல் என பல கமர்ஷியல் படங்களில் நடித்த சூர்யா 2009ல் “வாரணம் ஆயிரம்” படத்தில் அப்பா -மகனாக நடித்தார். இந்த படம் சூர்யாவின் நடிப்புக்கு மகுடம் தான். அதேபோல் “அயன்” படம் அவரை வசூலில் உயர்த்தியது.

மீண்டும் போலீஸ் கேரக்டரில் “துரை சிங்கம்”ஆக “சிங்கம்” படத்தில் நடித்தார். இதன் வெற்றி “சிங்கம்2” “சிங்கம்3” என தொடர்ச்சியான சீரிஸ் படங்களை கொடுக்க வைத்தது. “மாற்றான்” படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்து பாராட்டை பெற்றார்.

மௌனம் பேசியதே “கௌதம்”, உன்னை நினைத்து “சூர்யா”,அஞ்சான் “ராஜூ பாய்”, 24 “ஆத்ரேயா”, “சில்லுன்னு ஒரு காதல்” கௌதம் என அவரது கேரக்டருகளுக்கென்றே பெண் ரசிகர்களும் உண்டு.

தன்னுடன் 6 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து 2006ல் திருமணம் செய்தார். இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.இது சூர்யாவுக்கு இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வு என பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார் நடிகர் சூர்யா. தனது “2டி” நிறுவனம் மூலம் 36 வயதினிலே, பசங்க-2, உறியடி-2 உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். பாடகராகவும், சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சூர்யா தன்னை உயர்த்திக் கொண்டார்.

அவர்தான் தமிழ் சினிமாவில் “சிக்ஸ் பேக்” வைத்த முதல் நடிகர். தமிழ் சினிமாவின் பாலா, மணிரத்னம், ஹரி, கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என அனைத்து கமர்ஷியல் இயக்குநர்களுடன் இணைந்து மாஸ் கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் இயக்குநர் ஹரியுடன் மட்டும் 5 படங்களில் இணைந்துள்ளார்.

கடைசியாக முன்னணி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் “என்ஜிகே” படத்தில் நடித்தார். அடுத்ததாக காப்பான், சூரரைப்போற்று ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

42 படங்களில் நடித்துள்ள சூர்யாவுக்கு கடைசியாக சில படங்கள் சரியாக போகவில்லை. ஆயினும் தோல்விகளையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது ஒவ்வொரு படங்களிலும் இன்னும் இளமையாகவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இன்றைய தினம் ட்விட்டரிலும் பிறந்தநாள் ஹேஸ்டேக் ட்ரெண்டானது. மற்ற சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது பிறந்தநாள் பரிசாக “காப்பான்” திரைப்பட பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது. அவரது பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் பல்வேறு ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா…!

Exit mobile version