சினிமாவை மிஞ்சும் சூரிநாம் நாட்டு அதிபரின் செயல்

தென்அமெரிக்க நாடான சூரிநாமில் நீதிமன்றம், ஆளும் அதிபருக்கே 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம் உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு சூரிநாம். 1980ஆம் ஆண்டில் இங்கு ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, தேசி பவுட்டர்ஸ் என்பவர் இங்கு அதிபரானார், இன்றுவரை தொடர்ந்து அவரே அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப் பொருள் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட இவர் மீது, பல்வேறு கொலை வழக்குகளும் விசாரணையில் உள்ளன. இருந்தும் இவரை யாரும் அசைக்க முடியவில்லை.

கடந்த 1982ஆம் ஆண்டில், தேசி பவுட்டர்ஸ்சின் முதலாவது ஆட்சிக் காலத்தில், அவரை எதிர்த்த 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட குடிமக்கள், 2 பேர் ராணுவ அதிகாரிகள். இது டிசம்பர் படுகொலை என்று அழைக்கப்படுகின்றது. எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை குறித்து, கடந்த 2007ஆம் ஆண்டு சூரிநாம் நாட்டின் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தேசி பவுட்டர்ஸ் உள்ளிட்ட 24 பேர் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்தக் கொலைக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் தேசி பவுட்டர்ஸ் மறுத்தார். கொலை நடந்த போது தான் நாட்டிலேயே இல்லை எனவும், குற்றவாளிகள் தப்பிக்க முயன்றதால்தான் மரண தண்டனைக்கு உள்ளாக்கபட்டனர் என்று அவர் வாதிட்டார். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பில்தான் தேசி பவுட்டர்ஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசி பவுட்டர்ஸ், நாடு திரும்பியவுடன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளார். அதனால் இந்த சிறை தண்டனை உடனே நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்றே சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும், ஆளும் அதிபருக்கே சூரிநாம் நாட்டின் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version