நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழையால் அவலாஞ்சி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஒருவாரக்காலம் பெய்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இரு வாரங்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அவலாஞ்சி அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதன் முழுக் கொள்ளளவான 171 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்புக் கருதி, நேற்றிரவு 8 மணி முதல் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அவலாஞ்சி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேரடியாகக் குந்தா அணைக்குச் சென்றடைவதால், குந்தா அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்துக் குந்தா, கெத்தை, முள்ளி, பில்லூர் ஆகிய பகுதிகளில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மின் வாரியம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.