கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 700 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர் வரத்து படிப்படியாக குறைந்த வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 700 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்ததால், ஒகேனக்கல் மெயினருவி, நடைபாதையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 191-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 49 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 106 அடியாகவும், நீர் இருப்பு 72 டி.எம்.சி யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.