குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், இது குறித்த வழக்கை ஜனவரி மாதத்தில் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்து, சமண, பவுத்த, சீக்கிய, பார்சி, கிறித்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆறாண்டுகள் குடியிருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துள்ளார்.
இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் அரசியலமைப்பில் கூறப்பட்ட சமத்துவத்துக்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதிக்கவும் கோரியுள்ளனர்.
அந்த மனுக்கள் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்ட நீதிபதிகள், இது குறித்துப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கை மீண்டும் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிப்பதாகவும் அறிவித்தனர்.