உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்து போகும் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையாக உச்ச நீதிமன்றம் மாறும் என தலைமை அரசு வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நமது நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நெறிமுறைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக மிக ஆபத்தாக உள்ளதாகவும், இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்தது போல் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும் என்று கூறியுள்ளார்.
சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறுவதாகவும், ஆனால், மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின் படி தீர்ப்பு வழங்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு, இருவேறு குரல்களில் பேசி உள்ளதாக தெரிவித்துள்ள வேணுகோபால், இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். படிப்பறிவு குறைவாக இருந்தாலும், தங்களுக்கு எது நல்லது என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.