சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களை அனுமதித்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை மேகாலயா அரசு உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் நிலக்கரி சுரங்கங்களை மூடவும், 100 கோடி ரூபாய் அபராதத்தை மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அடுத்த இரண்டு மாதங்களில் ஒப்படைக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேகாலய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோஸப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, 100 கோடி ரூபாய் அபராதத்தை மேகாலயா அரசு உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியைப் பறிமுதல் செய்து கோல் இந்தியாவிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களை நடத்தியவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.