குருவாயூர் கோவிலுக்கு உள்ளதைப் போல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் தனிச்சட்டம் இயற்றுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரிய பல்வேறு மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்தச் சீராய்வு மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது குருவாயூர் கோவிலுக்கு உள்ளதைப்போல் சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கும் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் எனப் பந்தளம் அரச குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு தனிச்சட்டம் இயற்றுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்குத் தள்ளி வைத்தனர்.