அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அயோத்தி விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினரிடையே சமரசம் செய்வதற்காக மத்தியஸ்தர் குழு நியமிக்கப்பட்டது. மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தொடங்குகின்றனர். நாள் தோறும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.