பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் இன்ஸ்டா பக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவனுக்கு ” இந்தியா ஆறுதல் தெரிவிக்கும்” விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் நுழைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, திட்டமிட்டபடி விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். லேண்டரின் உயரம் 100 கிலோமீட்டரில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில், லேண்டர் இருந்த போது திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் லேண்டர் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள இயலாமல் போனது. மேலும் இத்தகைய சம்பவத்தால் சந்திரயான்-2வின் செயல்பாடுகளை உற்றுநோக்கிய உலக நாடுகள் கூட அதிர்ச்சியடைந்தன.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி சிவன் மற்றும் குழுவினருக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடமிருந்து ஆறுதல்களும், அவர்களின் சீரிய முயற்சிக்கு பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஆறுதல் தெரிவிக்கும் விதமாக இந்தியவரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி சிவனை கட்டிதழுவுவதை போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.