வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச்சென்ற பொழுது.
‘விடு என்னை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை’
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
‘சற்று முன்தான் நான் வயோதிகம்
இப்போது மரணம்’ என்று
என்னை இறுகத் தழுவிக் கொண்டது
அது.
-பசுவய்யா
‘பசுவய்யா’வாக கவிதைகளிலும் சு.ராவாக கதைகளிலும் சுந்தர ராமசாமியாக இதழியலிலும் வென்று தீர்த்த சுந்தர ராமசாமியின் 91ஆவது பிறந்தநாள் இன்று.
1931ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் சுந்தர ராமசாமி. தனது தந்தையின் தொழில் காரணமாக தனது குழந்தை பருவத்தை கேரளாவில் கழித்தார். 8 வயதாக இருக்கும்போது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சுந்தர் ராமசாமியின் தாய்மொழி தமிழாக இருந்தாலும், கேரளாவில் வளர்ந்ததால் அவருக்கு கல்வி மலையாளத்தில்தான் கற்பிக்கப்பட்டது. இப்படித்தான் இருமொழிக்கும் சொந்தக்காரப்பிள்ளையாக வளர்ந்து வந்தார் சுந்தர ராம்சாமி.
தனது 18வது வயதில் எழுத்துக்கூட்டி தமிழ் படிக்கத்தொடங்கினார். சரியாக 3 வருடத்தில் தமிழில் கதைகளை எழுத தொடங்கிவிட்டார். தொடக்கத்தில் சாந்தி இதழில் கதைகளை எழுதினார். `முதலும் முடிவும்’, `தண்ணீர்’, `அக்கரைச் சீமையிலே’, `பொறுக்கி வர்க்கம்’, `கோயில் காளையும் உழவு மாடும்’ ஆகிய ஆரம்பக்கதைகள் `சாந்தி’ இதழிலும், `கைக்குழந்தை’, `அகம்’, `அடைக்கலம்’, `செங்கமலமும் ஒரு சோப்பும்’, `பிரசாதம்’, `சன்னல்’, `லவ்வு’, `ஸ்டாம்பு ஆல்பம்’, `கிடாரி’, `சீதைமார்க் சீயக்காய்த்தூள்’ ஆகிய கதைகளை `சரஸ்வதி’ இதழிலும் எழுதினார். மலையாளத்தில் வெளியான “தோட்டியின் மகன்’ `செம்மீன்’ நாவல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
எழுதி வைப்பதெல்லாம் எழுத்தல்ல. வாசிப்பவனை வார்த்தைகளுக்குள் வாழ வைப்பதே எழுத்து. இன்னும் குறிப்பாக சொல்வதானால், காலம் முழுக்க நிலைத்து நிற்கும் கதைகள் அப்படிப்பட்டவையாகவே இருந்துள்ளன.
சுந்தர ராமசாமியின் அப்படியான ஒரு படைப்பு ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற நாவல். 1966ல் இந்த நாவலை எழுதி முடித்தவர் அடுத்த ஆண்டு அதாவது 1967 லிருந்து 6 ஆண்டுகள் எதையும் எழுதவில்லை. சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக எழுதுவதை தவிர்த்தார். மீண்டும் புதுப்பாய்ச்சலில் எழுத ஆரம்பித்தார். 1981-ல் இவர் எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் இன்றளவும் அதிகம் விவாதிக்கப்படும் நாவலாக இருக்கிறது. 1988-ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். 1998-ல் இவரது மூன்றாவது நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளியாயிற்று. வாசகப்பரப்பால் சு.ரா. என்று செல்லமாக அறியப்பட்ட சுந்தர ராமசாமி
குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74-வது வயதில் காலமானார்.
புளியமரம் விதைக்கப்பட்டது.