டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐ.பி.எல். 2020 தொடரின் 11வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகளுக்கிடையிலான போட்டி அபுதாபி, ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வெற்றிபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் ரன்களை கணிசமாக உயர்த்தினர். அந்த அணி 77 ரன்கள் எடுத்திருந்தபோது, 33 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 45 ரன்கள் எடுத்து வார்னர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ, 48 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில்லியம்ஸன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. அப்துல்சமத் 12 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 1 ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
டெல்லி அணி தரப்பில் ரபாடா, மிஷ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. ப்ரித்வி ஷா, சிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ப்ரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் மிக மெதுவாக ரன்கள் சேர்க்க, டெஸ்ட் போட்டியை தான் பார்க்கிறோமோ என்ற எண்ணம் ரசிகர்களுக்கு உருவானது. குறிப்பிட்டு சொல்லும் படியாக எவரும் ரன்களை சேர்க்காத நிலையில், சிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐ.பி.எல். தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஹைதராபாத் அணி தரப்பில், அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களையும், கலீல் அஹமது, நடராஜான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக ரஷீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி நேற்றைய தோல்வியால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
தொடரின் 12வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையே, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.