ஐ.பி.எல் கிரிக்கெட் – ஐதராபாத்திடம் போராடித் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல் 2020 தொடரின் 14வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி பேர்ஸ்டோ வெளியேறினார். வார்னர் 28 ரன்களும், மனிஷ் பாண்டே 29 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். 11 ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. 24 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 31 ரன்கள் எடுத்து அபிஷேக் அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது ஐதராபாத் அணி. அதிரடியாக விளையாடிய ப்ரியம் கர்க், 26 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட 51 ரன்களுடனும், அப்துல் சமத் 8 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சாஹர் 2 விக்கெட்டுகளையும், தாகூர் மற்றும் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வழக்கம் போலவே தொடக்க வரிசை சொற்பரன்களில் சரிந்தது. 8 ஓவர்களில் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 100 ரன்களை கடக்குமா என்பதே சந்தேகம் என்ற நிலையில், தோனி, ஜடேஜா இணை அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. வழக்கமாக 6வது, 7வது விக்கெட்டுக்கு களமிறங்கும் தோனி நேற்றைய போட்டியில் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாட ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டியை தான் பார்க்கிறோமோ என்ற சலிப்பு ஏற்பட்டது. 15 ஓவர்களில் 79 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது சென்னை அணி. அதன் பிறகு ஜடேஜா அதிரடியில் இறங்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசிய அடுத்த பந்திலேயே ஜடேஜா அவுட்டானார்.

16 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் போட்டி பரபரப்பானது. சாம் கரண், தோனி இருவரும் போராடியும் இறுதியில் போட்டி தோல்வியிலேயே முடிந்தது. தோல்வி உறுதியான நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி போட்டியை முடித்து வைத்தார் சாம்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது சென்னை அணி. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. தோனி 47 ரன்களுடனும், சாம் கரண் 15 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அப்துல் சமத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரசீத் கான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும், அபாரமாக பந்துவீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

26 பந்துகளில் அரைசதம் விளாசிய ப்ரியம் கார்க் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி, அபுதாபியில் இன்று மதியம் 2 மணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி, சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கும் நடைபெறுகிறது.

Exit mobile version