கோடை விடுமுறை முடிந்தது-மாணவர்கள் உற்சாகம்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளநிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த மே 31ம் தேதி உடன் நிறைவடைந்தது. பருவத்தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் முதல் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் திறக்கப்படும் இன்றே, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 19ம் தேதி தொடங்கப்பட உள்ளது. 2019 – 2020-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் 90 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு 6500 இடங்களில் கூடுதலாக மாணவர் சேர்க்கையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளிலும் 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய படிப்புகளுடன் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை முடிந்து கல்லூரிக்கு உற்சாகத்துடன் வந்திருப்பதாகவும், நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version