சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதலமைச்சர் கனவிலிருக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கூட தகுதியற்றவர் என கூறினார். சூலூரில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோல் அதிமுக கூட்டணி சூலூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சூலூரில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற பாடுபட வேண்டுமென தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.