ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித், உயிரிழந்த சம்பவம், தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் கடந்த 25ம் தேதி மாலை தவறி விழுந்தான். இதனையடுத்து குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர், குழந்தை சுஜித்தை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, மதுரை மணிகண்டனின் நவீன கருவி மூலம் குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது, குழந்தை சுஜித் கைகளில் கயிறு மாட்டி இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து சென்னை, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு குழுக்கள் வரவழைக்கப்பட்டு, குழந்தை சுஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில், குழந்தை சுஜித் துர்திஷ்டவசமாக மண் சரிவினால் மெல்ல மெல்ல 88 அடிக்கு சென்றுவிட்டான்.
பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டி, குழந்தை சுஜித்தை மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. குறிப்பிட்ட அடிகளுக்கு பிறகு, பாறைகள் தென்பட்டதால், குழி தோண்டும் பணி கடினமானது.
இதனையடுத்து, ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்றது. கடின பாறைகளால் துளையிட ரிக் இயந்திரம் திணறியது. இதனையடுத்து, 3 மடங்கு திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்புப் பணியை மேலும் தீவிரப்படுத்தினார். இந்நிலையில், பாறைகளை துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிக திறன் கொண்ட போர்வெல் மூலம் துளைகள் இட்ட பிறகு, ரிக் இயந்திரம் மூலம் பாறைகள் துளையிடும் பணி நடைபெற்றது.
இந்த பணி 2 நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது. இந்நிலையில், 29ம் தேதி அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர், குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க நடைபெற்ற 5 நாள் போராட்டம் துயரத்தில் முடிந்தது.
இதனையடுத்து, குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுஜித் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று காத்திருந்த தமிழகமே சோகத்தில் மூழ்கியது.