"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக அரசு தெரிவித்த நிலையில், கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதியில் பொங்கல் கரும்புகள் அறுவடை செய்து 4 நாட்கள் ஆகியும் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் சிலர் நேரடியாக வந்து தமிழக அரசு சார்பில் வாங்கி செல்வதாகவும் உடனடியாக அனைத்து கரும்புகளையும் வெட்டி லாரிகளில் ஏற்றி அனுப்பி விடுமாறும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி விவசாயிகள் உடனடியாக பயிரிடப்பட்ட அனைத்து கரும்புகளையும் கூலியாட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி அனுப்பிய நிலையில், மீதி கரும்புகளையும் உடனே வந்து ஏற்றிச்செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் 4 நாட்கள் ஆகியும் வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.

காடுகளிலேயே கரும்பு காய்ந்து வீணாகிப் போவதாகவும் இதனால் ஒரு ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் தற்போது வரை கரும்பு விவசாயிகளை சந்தித்து கொள்முதல் செய்யவில்லை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

கடந்த வருடம் 400 முதல் 450 ரூபாய் வரை விற்பனையான பத்து கரும்பு கொண்ட ஒரு கட்டு கரும்பு தற்போது 300 முதல் 350 ரூபாய் விலை போவதாக வருத்தம் தெரிவித்தனர்.

தமிழக அரசு அறிவித்தபடி கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்திருந்தால் தங்களுக்கு லாபம் கிடைத்திருக்கும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version