தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 650 கன அடியாக இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 700 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 650 கன அடியில் இருந்து வினாடிக்கு 700 கன அடியாக திடிரென அதிகரித்துள்ளது.
நீர்வரத்து குறைந்தும் ஒகேனக்கல் மெயினருவி, நடைபாதையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து194வது நாளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.