கார்ட்டோசாட் 3 உள்ளிட்ட 14 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகைச் செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு காலை 9 மணி 28 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான அறிவியலாளர் குழு கண்காணித்தது. 44 மீட்டர் உயரமும் 320 டன் எடையும் கொண்ட பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்ததை அடுத்து அதற்கு இரவு பகலாகப் பாடுபட்ட அறிவியலாளர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் கார்ட்டோசாட் 3 மட்டுமே முதன்மையானது. ஆயிரத்து 625 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் இருந்து நிலப்பரப்பில் உள்ளவற்றைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் திறன்பெற்றது. நகர்ப்புறத் திட்டமிடல், ஊர்ப்புற அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, கடற்கரையோர நிலப் பயன்பாடு மற்றும் பாதுகாப்புத்துறைப் பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் பயன்படும். பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் நிலப்படங்களைத் துல்லியமாக எடுத்து அனுப்ப கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் உதவும். ராக்கெட் விண்ணில் பாய்ந்த 17ஆவது நிமிடத்தில் கார்ட்டோசாட் 3 சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இதையடுத்து அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஒவ்வொன்றாகச் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டன.