பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பாடுகள் மூலம் தேசிய விருதுகளை பெற்று தமிழக அரசு வெற்றி நடைபோடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர், அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால் நாட்டிலேயே சிறந்த நிர்வாக திறன் மிக்க மாநிலம் என பல்வேறு விருதுகளை பெற்று தமிழக அரசு வெற்றி நடைபோடுவதாக பாராட்டியுள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக 4 மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும் இலங்கை நாட்டின் காவலில் உள்ள 12 மீனவர்களையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்ததில் முதலமைச்சரின் முயற்சிகளையும் ஈடுபாட்டையும் பாராட்டுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆளுநர் அறிவித்தார்.
மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
ஹஜ் மற்றும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியை அரசு உயர்த்தியுள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.