சந்திரயான் 2 விண்கலத்திருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர். இனி என்ன நடக்கும்….?

 
சந்திரயான் 2 விண்கலத்தின் லாண்டர் பகுதியானது அதன் ஆர்பிட்டரில் இருந்து இன்று தனியாகப் பிரிந்துள்ளது. 

ஆர்பிட்டர், லாண்டர், ரோவர் – ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் சந்திரயான் 2 விண்கலம். இதில் லாண்டர் விக்ரம் என்றும், ரோவர் பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டு உள்ளன.

ஆர்பிட்டர் என்பது அடிப்படையில் நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்யும் கலம். இது நிலவின் தரையில் இறங்காமல் சுற்றுப் பாதையில் பயணித்தபடியே இருக்கும். லாண்டர் என்பது நிலவில் தரை இறங்கி, இறங்கிய இடத்தில் ஆய்வு செய்யும் கலம். ரோவர் என்பது நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் கலம். 

ஆர்பிட்டருக்கான மின்னாற்றல் அதன் இரண்டு சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கின்றது. இந்த சூரிய மின்சாரம் கலத்தில் உள்ள லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கப்படுவதால், சூரிய ஒளி கலத்தை அடையாத நேரங்களிலும், கிரகணங்களின் போதும்கூட ஆர்பிட்டரால் இயங்க முடியும். 

இன்று மதியம் 1.15க்கு சந்திரயான் 2 விண்கலத்தின் லாண்டர் கலமான விக்ரம் ஆர்பிட்டர்  கலத்தில் இருந்து தனியே பிரிக்கப்பட்டது. எனவே ஆர்பிட்டர் இனி தனித்து இயங்கும். லாண்டரைப் பொறுத்தவரை அதற்கான பணிகள் இப்போதுதான் தொடங்கி உள்ளன.

தற்போது லாண்டர் கலமானது, ஆர்பிட்டர் கலம் சுற்றிவந்த அதே பாதுகாப்பான பாதையில், நிலவில் இருந்து குறைந்தபட்சம் 119 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிவருகின்றது. நாளை லாண்டரின் சுற்றுபாதையின் உயரம் நிலவில் இருந்து 109 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும், நாளைய மறுநாள் சுற்றுபாதையின் உயரம் மீண்டும் குறைக்கப்பட்டு 36 கிலோமீட்டராக்கப்படும். பின்னர் நிலவின் தென் துருவப் பகுதியை சந்திரயான் 2 கலத்தின் லாண்டர் நெருங்கும் போது அது தரையிறக்கப்படும்.

இந்தத் தரையிறக்கம் சந்திரயான் 2 செய்ல்திட்டத்தின் கடினமான பணிகளில் ஒன்று. ஏனெனில், சந்திரனில் காற்று மண்டலம் கிடையாது என்பதால் அங்கு பாராசூட்கள் வேலை செய்யாது. எனவே லாண்டர் சந்திரனின் மேற்பரப்பில் வேகமாக விழுந்து மோதுவதைத் தடுக்க,  லாண்டரில் சிறிய ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

லாண்டரை சந்திரனின் ஈர்ப்பு விசை கீழ் நோக்கி ஈர்க்கும் போது, இந்த ராக்கெட்டுகள் நெருப்பை பீய்ச்சி அடித்து லாண்டரை மேல்நோக்கி தள்ளும். இதனால் லாண்டர் தரையிறங்கும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு விபத்து தவிர்க்கப்படும். இதில் ரஃப் பிரேக்கிங், ஃபைன் பிரேக்கிங் – என்று இருவித வேகத்தடை அமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. 

இந்த சூழலில் லாண்டரின் அடிப்புறத்தில் இருக்கும் ரேடார் கருவியானது கலம் சந்திரனின் தரை நெருங்கி விட்டதா என்பதைக் கண்காணிக்கும். அத்தோடு கலம் சந்திரனின் பள்ளங்கள் அல்லது சரிவுகளில் இறங்கவில்லை – என்பதையும் இந்த ரேடார் கருவியே உறுதி செய்யும்.

லாண்டரைப் பொருத்தவரை அதை நிலவில் தரையிறங்கச் செய்வதற்கான ஆற்றல் அதன் அதன் திரவ எஞ்சின்மூலம் கிடைக்கிறது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த கிரையோஜெனிக் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. நிலவில் ஆக்ஸிஜன் இல்லை என்பதால் ஆக்ஸிஜன் கலக்கப்படாத எந்த எரிபொருளும் அங்கு எரியாது.

லாண்டர் நிலவில் தரை இறங்கிய பின்னர் இயங்குவதற்கான ஆற்றல் அதன் சோலார் பேனல்களில் இருந்து கிடைக்கின்றது. ஆர்பிட்டரைப் போலவே இதிலும் லித்தியம் பேட்டரிகள் உள்ளன. அவற்றில் சூரிய மின்சாரம் சேமிக்கப்பட்டு அந்த ஆற்றலில் லாண்டர் இயங்கும்.

லாண்டர் எனும் இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதற்குள்ளிருந்து ரோவர் எனப்படும் ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு சக்கரங்களைக் கொண்டதாகும். இது தானாகவே நிலவின் தரையில் இடம்பெயர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபடும். அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல்படும்.

ஆய்வுக் கலத்திலும் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான சோலார் பலகை இடம் பெற்றிருக்கும். ஆனால் இதில் பேட்டரிகள் கிடையாது. சந்திரனின் ஒரு நாள் என்பது புவியின் 28 நாட்களுக்கு சமம். அங்கு ஒரு பகல் முடிவுக்கு வர புவியின் கணக்கில் 14 நாட்கள் ஆகும். இதே போல 14 நாட்கள் இரவாக இருக்கும். எனவே ரோவர் ஆய்வுக்கலமானது பகல் 14 நாட்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். இரவு நாட்களில் சோலார் மின்சாரம் கிடைக்காது என்பதால் ரோவரால் செயல்பட முடியாது. அத்துடன் ரோவரின் ஆயுள்காலம் முடிவடையும்.

சந்திரயான் 2வின் ரோவர் கலம் மிக மெதுவாகவே பயணம் செய்யும். ஒரு வினாடிக்கு ஒரு செண்டி மீட்டர் – என்பதுதான் அதன் வேகம். லாண்டர் சந்திரனில் தரையிறங்கிய பின்னர் அதிலிருந்து வெளிவரும் ரோவர் சந்திரனின் தரையைத் தொடவே 4 மணி நேரங்கள் ஆகும். சந்திரனின் ஒரு பகலில், அதாவது 14 பகல் நாட்களில் ரோவரால் சுமார் 200 மீட்டர் தூரத்தையே கடக்க முடியும்!. 

சந்திரயானின் ஆர்பிட்டர், லாண்டர், ரோவர் – ஆகிய அனைத்துக் கலங்களிலும் மொத்தம் 13 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக கேமராக்களும் உள்ளன. 

லாண்டர், ரோவர் ஆகிய இரண்டு கலங்களும் கிடைக்கும் தகவல்களையும் புகைப்படங்களையும் உயரே சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கலத்துக்கு அனுப்பும். அத்தோடு ஆர்ப்பிட்டர் கலமும் தனியாக சில தகவல்களைச் சேகரிக்கும். இந்த அனைத்து தகவல்களும் ஆர்ப்பிட்டர் கலத்தில் இருந்து இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பார்க்க மிகப் பெரிய செயல்முறையைப் போல இது தோன்றினாலும், உண்மையில் அப்படி அல்ல. ரோவர் ஒரு புகைப்படம் அல்லது தகவலை வெளியிடுகிறது என்றால், அது ஆர்பிட்டர் மூலம் இஸ்ரோவுக்கு அடுத்த 15 நிமிடங்களில் அது வந்துவிடும்.

 
 
 
Exit mobile version