பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில், கனிசமான அளவிற்கு கமிஷன் அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் தொகுப்பில் இருக்கவேண்டிய பொருட்களில் சில இல்லாமலும், இருக்கும் பொருட்களும் தரமற்றதாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ்நாட்டில், 2 கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து, அதற்காக, ஆயிரத்து 297 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது.
பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களே கொள்முதல் செய்துள்ளன. மற்ற பொருட்களை நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்தது.
தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் ஒவ்வொன்றிலும், பெருமளவிற்கு கமிஷன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை நிரூபிப்பது போல், பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் உள்ளதையும், பொதுமக்களே ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.
மேலும், பெரும்பாலான இடங்களில், 21 பொருட்கள் இல்லாமல், 15 முதல் 17 பொருட்களே இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இது குறித்த ஏராளமான செய்திகள் நியூஸ் ஜெ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு சரியாக வழங்கப்படுவதை, சம்பந்தப்பட்ட துறையும், அதிகாரிகளும் உறுதி செய்யவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது, பொங்கல் தொகுப்பு சரியாக வழங்கப்படவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளதை காட்டுகிறது. இதன் மூலம், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதால், இதற்கு அரசு என்ன பதில் கூறப் போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும், கமிஷன் பெறுவதற்காகவே, பொங்கல் பரிசுத் தொகுப்பிலுள்ள பொருட்கள், வெளி மாநிலங்களில் வாங்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்ததை நிரூபிக்கும் விதமாக தற்போது கமிஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மூலம், திமுக என்றாலே கரப்ஷன், கமிஷன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை நிரூபித்துள்ளனர் திமுகவினர்.