சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து விரைவில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநரின் மகள் சுப்ரஜா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே ஏரோபிக்ஸ் கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவரின் ஆர்வத்திற்குக் காரணம், இவர் தாய் தான். அவரும் ஒரு ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் ஆவார். அதுமட்டுமல்லாமல் அவர் இந்திய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இதனால் சிறு வயதிலேயே ஏரோபிக்ஸ் கலையில் அதிக ஆர்வம் கொண்டு, அதனை முறையாகக் கற்றுக்கொண்ட சுப்ரஜா பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றார்.
கடந்த மாத இறுதியில் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து வெள்ளிப் பதக்கம் பெற்ற சுப்ரஜாவுக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து அடுத்து நடைபெறவுள்ள ஆசிய அளவிலான ஏரோபிக் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க சுப்ரஜா தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது அடுத்த லட்சியம் என்றும், அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுப்ரஜா தெரிவித்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் சாதனை படைத்துவரும் சுப்ரஜா, சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி ஆவார்.