நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் உடன் மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுக்கம்பட்டு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய முதலமைச்சர், சேதமடைந்த நெற்பயிர்களை கையில் வாங்கி ஆய்வு செய்தார். முழங்கால் அளவு நீரில் நின்றபடி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது, புயலால் ஏற்பட்டுள்ள சேத நிலவரங்கள் குறித்து மாவட்ட சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அனுக்கம்பட்டு பகுதியைத் தொடர்ந்து ஆலம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புயல் சேதங்கள் தொடர்பான புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்ட முதலமைச்சரிடம், அதிகாரிகள் சேத விவரங்களை, விரிவாக எடுத்துரைத்தனர்.
இறுதியாக சாலியன்தோப்பு கிராமத்தில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளைநிலங்களுக்கு நேரடியாக சென்ற அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களின் நிலை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மழையால், சேதமடைந்த பயிர்கள், புயல் சேதங்கள் தொடர்பான புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். அப்போது புயல் சேதம் பற்றி முழு விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி, தோட்டக்கலைத்துறையினர் உடனிருந்தனர்.