போலி மணல் குவாரிகளுக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் நடவடிக்கை

பழனி அருகே எம்.சாண்ட் என்ற பெயரில் தரமற்ற மண் விற்பனை செய்துவந்த தனியார் மணல் குவாரிகளுக்கு சார் ஆட்சியர் அருண்ராஜ் சீல் வைத்தார்.

தமிழக அரசு ஆற்றுப் படுகையில் மணல் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இதனால் மணலுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சமீபகாலமாக கட்டடங்கள் கட்டுவதற்கு தரமற்ற மணல் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் சார் ஆட்சியர் அருண்ராஜ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துவருகிறார். அதனடிப்படையில், சார் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பழனியை அடுத்துள்ள சின்னக் கலையமுத்தூர், சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில், எம்.சாண்ட் என்ற பெயரில் தரமற்ற மணல் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, குவாரிகளுக்கு சீல் வைத்த சார் ஆட்சியர் அருண்ராஜ், குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

Exit mobile version