சீனப்பொருட்களை புறக்கணிக்க இந்திய மக்கள் 87% பேர் தயாராக இருப்பதாக ஆய்வில் தகவல்!

சீனப்பொருட்களை புறக்கணிக்க இந்திய மக்கள் 87 சதவீதம் பேர் தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம். எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா மீது இந்திய மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் எனவும், சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பாக LocalCircles அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 235 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், அடுத்த ஓராண்டுக்கு சீனப்பொருட்களை புறக்கணிக்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 87% மக்கள் சீனப்பொருட்களை புறக்கணிக்க தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். Tik Tok, WeChat உள்ளிட்ட செயலிகளையும், பிரபல சீன நிறுவனங்களின் பொருட்களையும் இந்தியாவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இந்த நிமிடத்தில் இருந்து சீனாவை சேர்ந்த எந்த பிராண்டட் பொருட்களையும் வாங்க மாட்டோம் என 58% பேர் கூறினர். ஆனால், 39% மக்கள், “புதிதாக சீன பிராண்டட் பொருட்களை வாங்க மாட்டோம். ஆனால், தற்போதுள்ள பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவோம்” என தெரிவித்தனர்.

இதன் மூலம், மொத்தமாக 97% இந்திய மக்கள் சீன பிராண்டட் பொருட்களுக்கு மாற்றாக, இந்திய பிராண்டட் பொருட்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்திய அரசு 200% சுங்க வரி விதித்திருந்தது. அதேபோல, தற்போது சீன பொருட்களுக்கு 200% வரி விதிக்கலாமா எனவும் ஆய்வில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பலர் தீர்க்கமான பதிலை தெரிவிக்கவில்லை. 42% மக்கள் மட்டும், கண்டிப்பாக சீனப்பொருட்களுக்கு 200% வரி விதிக்க வேண்டும் என கூறினர். சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், அது அத்தனை எளிதானதல்ல என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பயன்படுத்தும் டிவி, மொபைல், வாஷிங் மெஷின் தொடங்கி சிறிய பொம்மைகள் வரை பெரும்பாலும் சீன பொருட்களாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 16% சீனப் பொருட்களாக உள்ளதாகவும், ஆனால், நம்மிடம் இருந்து 3.2% பொருட்கள் மட்டுமே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சாதக, பாதகங்களை கருத்தில்கொண்டு, சீன பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

Exit mobile version