தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததை அடுத்து வறட்சி நிலவுகிறது. இதனால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கென தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். குடிநீர் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லாத அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் கள ஆய்வு நடத்த வேண்டும் என கூட்டத்திற்கு தலைமையேற்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் மக்களின் குறைகளின்மேல் கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் மேலும் பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டால் உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிகமாக தண்ணீர் தட்டுப்பாடு என்று பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.