வெளிநாட்டில், கல்வி சுற்றுலாவிற்காக சென்று, தமிழகம் திரும்பிய மாணவ-மாணவியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் பள்ளிகல்வித்துறை சார்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டிற்கு கல்வி சுற்றுலாவிற்காக தமிழகத்தைச் சேர்ந்த 50 மாணவ-மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைமுடித்து சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது வெளிநாட்டில் கல்வி கற்பிக்கும் முறை, தேர்வு முறை, அயல்நாட்டு கல்வி திட்டங்கள், மறு சுழற்சி முறையில் கழிவுகளைப் பயன்படுத்தும் முறை, விளையாட்டு உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொண்டதாக மாணவர்கள் கூறினர். கல்வி சுற்றுலா மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.