சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்க மாணவர்களுக்கு உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை, வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது 3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.

மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.

வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version