நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா, கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், மாணவனின் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், தற்போதுள்ள முகமும் மாறுபட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், கல்லூரி முதல்வருக்கு இ-மெயிலில் புகார் அனுப்பினர். இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினார். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் சந்தேகமடைந்த அவர், மாணவனின் சான்றிதழை உள்ளிட்டவற்றை டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சுகாதாரத்துறை இயக்குனரகத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, ஆள்மாறாட்ட புகார் குறித்து விசாரணை நடத்த 4 பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், மாணவர் உதித்சூர்யா மீது க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் உதித்சூர்யா தற்போது கல்லூரிக்கு வருவதில்லை என்று கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தலைமறைவான மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.