விஜயதசமி நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி விஜயதசமி நாளில் கல்வியை தொடங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் ஏராளமானோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். விஜயதசமி மாணவர் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையிலான கல்வி தரம், இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடைகள், காலணி போன்றவற்றால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை மாதிரிப் பள்ளியில் இருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் ஆர்வமுடன் வந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். முதல்நாளில் பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளை மலர் கொடுத்தும், இனிப்பு வழங்கி அரசு பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.