ஆளுநர் முடிவு தெரிந்தால் மட்டுமே, மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயத்தில், ஆளுநரின் முடிவு தெரியும் வரை, மருத்துவ கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர், மருத்துவ இடங்களில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார். ஆளுநருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்று குறிப்பிட்டார்.

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? என்று கேள்வி எழுப்பினர். மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்டமசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? என்றும் வினவினர். அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவருவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் நான்கரை லட்சம் ரூபாய் செலவழித்து, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாத நிலையில் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாது என்று கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன், அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாக கூறினார். ஆளுநர் முடிவெடுக்கும் வரை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை அறிவிக்கப்போவதில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version