நாளை நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தி அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டால் அது விதிமுறை மீறிய செயல் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தினங்களில் பணிக்கு வராத அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்தம் அன்று தற்செயல் மற்றும் மருத்துவ விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும். ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வேலை நிறுத்ததில் பங்கேற்றால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். வேலை நிறுத்தம் அன்று விடுமுறை எடுக்க கூடாது. வேலை நிறுத்தம் அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியல் அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.