சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கை செயல்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் பொதுமக்கள் தேவையின்றி சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் நடவடிக்கைகளை சிசிடிவி கேமிரா உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கவேண்டுமன்றும் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிகளவு தடுப்பு வேலிகளை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதுடன், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஒலிப் பெருக்கிகள் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக எடுத்துரைக்கவேண்டுமெனவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் அனைவரையும் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதை உறுதி செய்யவேண்டுமென தெரிவித்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்க சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவர் கூறியுள்ளார். கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்காத வகையில் துரிதமாக பணிகளை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.