கொரோனா தடுப்பு மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி,
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரேனாவுக்கு எதிராக முழு பலத்துடன் மத்திய, மாநில அரசுகள் போராடி வருவதாக தெரிவித்தார்.
வைரஸ் தொற்றுக்கு ஒவ்வொரு உயிரும் இழப்பதை, நாட்டு மக்களுடன் சேர்ந்து தானும் உணர்வதாகவும், மக்களின் துயரங்களை துடைக்க, ஒட்டுமொத்த துறைகளும் இரவு, பகலாக உழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை தயாரித்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மருத்துவமனைகள் மற்றும் கொரோனா வார்டு மையங்களை உருவாக்குவதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்றும் புதிய தொழில்நுட்பத்துடன் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த கடினமான நேரத்தில், ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதிப்படுத்த முப்படைகள் முழு பலத்துடன் செயல்பட்டு வருவதாகவும், முகக்கவசம் அணிவதையும், பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிப்பதையும் மக்கள் தவிர்த்துவிடக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.