கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மீது, கல்லூரி மாணவி ஒருவர் புகார் கொடுத்திருந்தார். பேஸ்புக் மூலம் பழக்கமான அவர்கள், ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தார்.
அந்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.